2007/10/31

முத்தம்....

கொஞ்சம் நடைமுறைக்கு ஏற்ற மாதிரி யோசிச்சுப்பாரு மலர். கல்யாணம் பண்ணிக்காம ஒரு பொண்ணால ஒரு லெவலுக்கு மேல வாழ்க்கை நடத்தறது ரொம்பக் கஷ்டம்என்று ஆரம்பித்தாள் அனு.

கல்யாணத்தைத் தவிர வேற ஏதும் பேச மாட்டியா? வீட்லதான் இதையே பேசி தொல்ல பண்றாங்கன்னா நீயுமா?’

மலர் என்கிற தேன்மலரும் அனு என்கிற அனுஸ்ரீயும் ஒரு இந்திய நிறுவனத்திற்காக, அமெரிக்காவில் ஒன்றாக வேலை பார்ப்பவர்கள். ஒரே நாளில் வேலையில் சேர்ந்து, ஒரே தொழில்நுட்பத்தில் வேலை செய்து, ஒரே நாளில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று, ஆறு வருடங்களைக் கடந்து, இன்றும் நியூ ஜெர்சியில் ஒரே வீட்டில் வசிப்பவர்கள். அலுவலக வேலைகளை முடித்துவிட்டு கார் நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள். மலர், கால்களைக் கொஞ்சம் நொண்டி நொண்டி நடந்துகொண்டிருந்தாள்.

நேத்து இரவு நீ தூங்கினதுக்கு அப்புறம், அப்பா அழைச்சிருந்தாரு. உன்னை எழுப்ப வேண்டாம்-ன்னு சொல்லிட்டாரு. நல்ல வரன் ஒன்னு வந்திருக்காம். பையன் ஆஸ்திரேலியால படிச்சுட்டு இப்போ ஜொகூரில நல்ல வேலைல இருக்காறாம்.’

நான் தூங்கல. நீ பேசிட்டு இருந்தது தெரியும். கல்யாணத்தைப் பத்திதான் பேசுவாரு-ன்னு தெரியும். அதான் கைபேசியை எடுக்கல.’

கைபேசியை எடுக்காம விட்டுட்டா பிரச்சினை தீர்ந்திடுமா?’

எப்பப்பாரு அங்க ஒரு மாப்ள இருக்கான், வங்கியில ஒருத்தன் வேலை பார்க்கறான், கலிஃபோர்னியால குப்பை கொட்றான்னு இதையே பேசிட்டு இருந்தா வெறுப்பா இருக்காது?’

உன் நல்லதுக்குதானடி சொல்றாரு.’

இதைப் பத்தி பேசறத நிறுத்தப் போறியா இல்லையா?’

இல்லடி உன் கால் முடியாதது பத்திக்கூட சொல்லிட்டாராம். அவங்களுக்கும் ஆட்சேபனை இல்லைன்னு சொல்லிட்டாங்களாம். அதான் உன்கிட்ட சொல்லச் சொன்னாரு.’

ப்ளீஸ் அனு. ஸ்டாப் இட்.’ மலரின் கண்கள் கொஞ்சம் கலங்கியிருந்தன. அனு காரை ஓட்டினாள். வீடு வரும் வரையிலும் இருவர் மனங்களிலும் எண்ணங்கள் அலை மோதினாலும், காரில் அமைதி நிலவியது.

2

முகிலன். கடந்த ஆறு மாதங்களாக தினமும் காலை 7.00 மணிக்குள் உலு தீராம் பேருந்து நிலையத்திலிருந்து 7.15-க்குப் புறப்படும் பேருந்தில் ஏறி ஜொகூர் பாரு வரையில் பயணம் செய்யும் ஒரு சாதாரணன். ஜொகூர் பாருவில் உள்ள ஒரு மின்னியல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியன். ஒல்லியான உருவமும், கருநீல நிறத்தில் கால்சட்டையும், நிறுவனத்தின் பெயர் அச்சிடப்பட்ட நீல நிற சட்டையும், கோணலாக சீவிய தலைமுடியும், நெற்றியில் கொஞ்சம் குங்குமமும் காலைநேர கூட்டத்திலும் அவனைத் தனியாக அடையாளம் காட்டும். இன்று காலை 6.30 மணிக்கே பேருந்து நிலையத்தை அடைந்தான். பேருந்தில் ஏறி ‘சிம்பாங் மாசாய்’ என்று கூறி சில்லரைக் காச்சிகளை உண்டியில் போட்டான். சிறிது நேரத்தில் பேருந்து அவன் சொன்ன இடத்தை அடைந்தது.

அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மலரின் பின்புறமாகச் சென்றுஹாய்என்றான்.

கொஞ்சம் திடுக்கிட்டவள் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்

ஹாய், என்ன இங்க?’ என்றாள். வேறு யாரும் தங்களை கவனிக்கிறார்களா என்று அவசரமாக நோட்டம் விட்டாள்.

இன்னிக்கு சீக்கிரமே எழுந்துட்டேன். அதான் இங்கேயே வந்துட்டேன். ஒரு பத்து நிமிஷம் உன் கூட இருக்கலாம்-என்று சிரித்தான்.

ஏன், இன்னும் கொஞ்சம் சீக்கிரமா எழுந்து என் வீட்டுக்கே வர்றதுதானே?’ என்று செல்லமாகக் கோபித்துக்கொண்டாள்.

அட, அதுகூட நல்ல யோசனைதான் நாளைலேர்ந்து வந்துடறேன்

எப்படியும்…. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், சில சமயம் என் மாமாவோ, இல்ல பக்கத்து வீட்டுக்காரங்களோ என்கூட வருவாங்க. நீ என் கூடப் பேசறதைப் பார்த்தாங்கன்னா, அடுத்த நிமிஷம் அழைச்சு அப்பா கிட்ட சொல்லிருவாங்க

உன்னைப் பார்க்க இங்கேயே வந்துட்டேன்னு சந்தோஷப்படுவேன்னு நெனைச்சேன்.’

சந்தோஷம்தான். ஆனா, அப்பாக்கு சேதி தெரிஞ்சுதுன்னா, படிச்ச வரைக்கும் போதும் திரும்பி வா-ன்னு சொல்லிடுவாரே, அப்போ என்ன பண்ணுவிங்க?’

நேரா உங்க வீட்டுக்கே வந்து உங்க அப்பாவைப் பார்த்து உங்க பொண்ண கல்லூரிக்கு அனுப்புங்க. நான் பத்திரமா பாத்துக்கறேன்னு சொல்லுவேன்.’

சொல்விங்க சொல்விங்கஎன்று அதிகம் வெளியில் தெரியாமல் சிரித்துக்கொண்டாள்.

இதற்குள் பேருந்து வர, இருவரும் ஏறி, அருகருகில் நின்று கொண்டார்கள். கையில் வைத்திருந்த நோட்டுப் புத்தகங்களை இவர்களுக்கு இடையூறு செய்யாதபடி பிடித்துக்கொண்டாள். இவர்கள் இருவரும் பேசுவது இவர்களைத் தவிர வேறு யாருக்கும் கேட்காதபடி பார்த்துக்கொண்டார்கள்.

அப்படி என்கூட அதிக நேரம் இருக்கணும்-னு நெனைக்கறவன், ஜொகூர் பாருவில் எறங்காம, என்கூட கல்லூரி வரைக்கும் வரனும், இல்ல அஞ்சலக பேருந்து நிறுத்தம் வரைக்குமாவது வரனும்.’

வரலாம்தான். என்ன, இருக்குற வேலையும் போய்டும். உங்க அப்பா கிட்ட வந்து பொண்ணு கேக்கறப்போ, என்ன வேலை பாக்கற-ன்னு கேட்டா எந்த வேலையும் இல்லைன்னு சொல்லணும். பரவாயில்லை-ன்னு உங்க அப்பா உன்னைக் கட்டிக்குடுப்பாரா

குடுப்பாரு, குடுப்பாரு, என் தங்கச்சியையும் சேர்த்துக் குடுப்பாருஎன்று புன்முருவினாள்.

அப்ப ரொம்ப நல்லதாப் போச்சு. இன்னிக்கே வேலையை விட்டுட….’. சொல்லி முடிப்பதற்குள் தன் சுண்டு விரல் கைப்பிடியோடு சேர்த்து நசுக்கப்பட்டதால் நிறுத்திக்கொண்டான்.

தான் இறங்கும் பேருந்து நிலையம் வந்துதும், ‘என்ன கல்லூரி வரைக்கும் வரட்டுமா?’ என்றான்.

வேண்டாம் வேண்டாம் கெளம்புங்க. நாளைக்குசிம்பாங் மாசாய்’ வராதிங்க. ஜொகூர் பாருலேயே பார்க்கலாம்என்று விடை கொடுத்தாள்.

3

இரவு தொலைபேசி அழைத்தது.

அப்பாவாத்தான் இருக்கும், எடுக்காதஎன்றாள் மலர்.

கேட்காமல் எடுத்தாள் அனு.

யாரு அனுவா? மலர் எங்கம்மா?’ என்று கேட்டாள் மலரின் அம்மா.

இன்னும் அலுவலகத்துல இருந்து வரலம்மா. ஏதாவது முக்கியமான விஷயமா?’ என்றாள் அனு.

ஆமாம்மா, அப்பாக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல. மலர்கூட பேசணும்-ன்னு சொன்னாரு. அதான் கூப்பிட்டேன்

சரிம்மா, மலர் வந்த உடனே பேசச் சொல்றேம்மாஎன்று கைப்பேசியை வைத்தாள் அனு.

மலர், வீட்டுக்கு ஃபோன் பண்ணுடிஎன்று கெஞ்சலாகச் சொன்னாள் அனு.

பேசினா திரும்பவும் கல்யாணப்பேச்சுதான் வரும்

பழசையே நெனைச்சுகிட்டு இன்னும் எவ்ளோ நாள்தான் இருக்கப்போற? நீ வீட்டுக்குப் போயி ஆறு வருடம் ஆகுது. இதுக்குள்ள நான் நாலு தடவை போய்ட்டு வந்துட்டேன். உன்னைப் பாக்கணும்-னு அவங்களுக்கும் ஆசை இருக்காதா மா? உன் நல்லதுக்குதான இவ்ளோ தூரம் சொல்றாங்க. நீ கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கணும்னுதானே அவங்களும் நெனைக்கறாங்க!!’

எனக்கு சந்தோஷம் வேண்டாம் விட்றுங்களேன்!’

கஷ்டம் உனக்கு மட்டும் இல்ல மா, உன்னால அவங்களும்தான் கஷ்டப்படறாங்க. நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவங்களுக்குச் சந்தோஷம். உன் தங்கைக்கும் சந்தோஷம். அவளும், நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு எத்தனைநாளா காத்துகிட்டு இருக்கான்னு யோசிச்சுப் பாரு.’

மீண்டும் தொலைபேசி அழைத்தது.

மலர் எடுத்துஹலோஎன்றாள். மலரின் தங்கை பேசினாள்.

மலர், நான்தான் பேசறேன். பப்லிக் ஃபோன்ல இருந்து பேசறேன். அப்பாக்கு ஒன்னும் இல்லை. உடம்பு சரியில்லைன்னு சும்மா சொல்றாரு. இன்னிக்கு உன்னைப் பொண்ணு கேட்டு வந்திருந்தாங்க. பையன் வெளி நாட்டுல எம். பி. ஏ. படிச்சிருக்காறாம். இப்போ ஜொகூரிலே நல்ல வேலையாம். உன்கிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொல்லியனுப்பிட்டாரு அப்பா. அதுனாலதான் உன்கிட்ட பேசணும்-ங்கறதுக்காக உடம்பு சரியில்லைன்னு சும்மா ட்ராமா பண்றாரு. நீ கவலைப் படாதே. அப்புறமா பேசு. சரி காசு முடியுது. ஃபோனை வெச்சிடுறேன்என்று வைத்தாள் மலரின் தங்கை.

தொலைபேசியில் பேசிய விவரங்களை அனுவிடம் சொன்னாள் மலர்.

நல்ல இடம் தானே மா; நல்ல வசதியான மாப்பிள்ளை. உன் குடும்பத்தோட சந்தோஷமே இப்போ உன் கையில தான் இருக்கு மலர். நல்லா யோசிச்சு முடிவு பண்ணு. தயவுசெஞ்சு வீட்டுக்கு அழைச்சுப் பேசு.’ என்றாள் அனு.

சில மணிநேர யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தாள் மலர்.

4

ஏழு மணிக்கே வந்து காத்துக்கொண்டிருந்த முகிலனுக்கு பேருந்து இன்னும் வரவில்லையே என்ற எண்ணம் வேம்பாகக் கசந்தது.

தாமதமாக வந்த பேருந்தில் ஏறி மலரைக் கண்டுபிடித்து அருகில் வந்தான். அவன் நிற்பதற்கு வசதியாக இடம் ஏற்படுத்தித் தள்ளி நின்றாள், மலர்.

நேத்து நீ கல்லூரிக்குப் போகலியோஎன்றான் முகிலன்.

போனேனே என்றாள் மலர் கொஞ்சம் நக்கலாக.

‘7.00 மணி பேருந்தில் உன்னைப் பாக்கவே இல்லையே

‘6.30 மணி பேருந்திலேயே போயிட்டேன்

அவ்ளோ சீக்கிரமா உனக்கு மட்டும் கல்லூரி திறந்து வச்சுருக்காங்களா?’ என்று கோபமானான் முகிலன்.

ஆமா

ஏன், இங்க ஏழு மணிக்கு ஒரு கேனையன் நிப்பான், அவனைப் பாக்காம போய்டணும்-னு சீக்கிரமா போனியா?

மலர் சிரித்துக்கொண்டே, ‘சரி சரி. ரொம்பக் கோவப்படாதிங்க. என் மாமா ஏதோ வேலையா காலையிலேயே கிளம்புனாரு. அதுனால அவர் காரிலேயே என்னையும் கூட்டிக் கிட்டுப் போய்ட்டாரு.’

பரவாயில்லை, நான் பேருந்திலேயே பேறேனு சொல்ல வேண்டியதுதானே.’

ஏன், எதுக்கு அப்படி எல்லாம் கேள்வி வரும். ஒரு நாள்தானேன்னு போய்ட்டேன். அதுசரி உங்களுக்கு மோட்டார் பைக் ஓட்டத் தெரியுமா?’

கோபம் காற்றோடு கறைய,தெரியுமாவா, சூப்பரா ஓட்டுவேன் என்றான்.

உன் பின்னாடி உக்காந்துகிட்டு ரொம்ப தூரம் போகணும்-னு ஆசையா இருக்கு டா மா என்றாள்.

5

சில மணி நேர யோசனைக்குப் பின் அனுவை அழைத்தாள் மலர்.

வீட்டுக்கு அழைக்கப்போறேன். கல்யாணத்துக்கு சரி என்று சொல்லிடப் போறேன்என்றாள்.

அனு மகிழ்ச்சியில் குதித்தாள். மலரைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள்.

சரி சரி உடனே கூப்பிடு’ என்றாள். அவளே எண்களைத் தட்டி மலரிடம் நீட்டினாள்.

ஃபோன் அடிக்குது.’ என்றாள்.

மலர்யின் தங்கை தொலைபேசியில் இணைந்துகொண்டுஹலோஎன்றாள்.

நான் மலர் பேசறேன்

ம்ம்ம்.. சொல்லு மலர் நல்லாயிருக்கியா?’

நல்லாயிருக்கேன். அப்பா இருக்காரா?’

இருக்காரு,’ என்றவள் மெதுவான குரலில், ‘நான் உனக்கு ஃபோன் பண்ணினது அப்பாக்குத் தெரியாது. நீயும் சொல்லிறாத என்றாள்.

சொன்னாலும் பரவாயில்லை, அப்பா கோவிச்சுக்க மாட்டாரு. அவர் கிட்ட கல்யாணத்துக்குச் சம்மதம்-னு சொல்லப்போறேன்என்றாள் மலர்.

சரி சரிஎன்ற மலரின் தங்கை, ‘என்னது, என்ன சொன்ன? திரும்பச் சொல்லு?’ என்று ஆச்சரியப்பட்டாள்.

ஆமா, கல்யாணத்துக்குச் சம்மதம்-னு சொல்லத்தான் அழைத்தேன்என்றாள் மலர்.

ம்ம்ம்மா, மலர் கல்யாணத்துக்கு ஓக்கே சொல்லிட்டா…’ என்று கத்தினாள் மலரின் தங்கை.

6

பேருந்தில் கோபமாக ஏறினான் முகிலன்.

நேத்து உனக்காக என் கூட்டாளி பைக்கபிஞ்ஜாம்’ வாங்கிக்கிட்டு, ரெண்டு மணி நேரம் நீ வழக்கமா ஏறுற இடத்துல காத்துக்கிட்டு இருந்தேன்.’ என்று பொறிந்தான்.

நான் தான் அப்போவே சொன்னேனே வர மாட்டேன்னு, நீ பைக்க கொண்டு வந்துட்டா நான் வந்துடனுமா?’

அப்புறம் ஏன் பைக்ல போகணும்னு ஆசை. புத்தகம் சாப்பாடுப் பை எதுவும் இல்லாம நீயும் நானும் மட்டும் போகணும். ரொம்ப தூரம் போகணும் என்றெல்லாம் சொன்ன!?’ என்றான்.

இப்பவும்தான் சொல்றேன். உன் கூடப் போகணும்-ன்னு அதுக்காக, மறுநாளேவா?’

உனக்காக நான் லீவு போட்டுட்டு வந்து உக்காந்திருந்தேன்.’

நானா லீவு போடச் சொன்னேன். கல்லூரி நாள்ல எவ்ளோ பேர் பேருந்துல கல்லூரிக்கு வர்றாங்க. அவங்க யாராவது ஒரு தெரிஞ்சவன் நம்பளைப் பார்த்துட்டு என் மாமா கிட்ட போய் சொன்னா என்னாகும்? இந்த ஊருல மாமாவுக்குத் தெரிஞ்சவங்க நெறைய பேர் இருக்காங்க. யாராவது பார்த்தாங்கன்னா அவ்ளோதான்

என்னாகும்? உங்க மாமாவுக்கு என்னிக்காவது ஒருநாள் தெரிய வேண்டியதுதானே, இப்பவே தெரியட்டுமே!!’

எதுக்கெடுத்தாலும் கோவப்படாதிங்க டா. அதோ பாருங்க, ஒரு அம்மா உக்காந்திருக்காங்கப் பாருங்க, அஞ்சாறு மாச கர்பமா இருக்கும்-னு நெனைக்கிறேன். என்னிக்காவது ஒருநாள் குழந்தை பொறக்கத்தானே போகுது, இன்னிக்கே பொறக்கட்டுமே-ன்னு இன்னிக்கே பெத்துக்க முடியுமா?’

‘…’

இன்னும் ஒரு செமஸ்ட்டர்தான் இருக்கு. அதை நான் ஒழுங்கா முடிக்கணும். அதுவரைக்கும் நாம ஜாக்ரதையாத்தான் இருக்கணும்

‘…’

முகிலன் எதுவும் பேசவில்லை. முகத்தில் சிரிப்பு காணாமல் போயிருந்தது. இருவரும் வெவ்வேறு திசைகளைப் பார்த்தபடி பயணித்தார்கள்.

சில நிமிட அமைதிப் பயணத்துக்குப்பின்.

சரி சரி. ரொம்ப சோகம் வேண்டாம். நாளைக்குப் போகலாம். ஆனா, நான் எப்பவும் ஏறுற எடத்துக்கு வர வேண்டாம். ஜொகூர் பாருக்கு வாங்க. கல்லூரிப் பக்கம் இல்ல. கொஞ்சம் தள்ளி வந்து நில்லுங்க. நான் வர்றேன்.’

முகிலன் முகத்தில் மீண்டும் மகிழ்ச்சி வரவும் அவன் இறங்கும் பேருந்து நிலையம் வரவும் சரியாக இருந்தது.

7

மாஸ் விமானம் சீனாய் விமான நிலையம் வந்து இறங்கியது. ஆறு வருடங்களுக்குப் பிறகு மலேசியக் காற்றை சுவாசித்தாள் மலர். பெட்டிகளை சேகரித்துக்கொண்டு, ‘கால் டாக்ஸி’ ஒன்றை வரவழைத்தாள். விமான நிலையத்திற்கு வரவேற்பதற்காக யாரையும் வரவேண்டாம் என்றும், வீட்டிற்குத் தானாகவே வந்துவிடுவதாகவும் முன்பே சொல்லியிருந்தபடியால், வரவேற்க யாரும் வரவில்லை. டாக்ஸியில் ஏறி, ‘ஜே. பி.’ என்றாள். அங்கே பெட்டிகள் பாதுகாக்கும் அறைக்குச் சென்றாள். எல்லாப் பெட்டிகளையும் மாலைவரை பாதுகாக்கும்படி கொடுத்துவிட்டு வெளியில் வந்தாள்.

அங்கிருந்து அவள் எப்பொழுதும் ஏறும் ‘சிம்பாங் மாசாய்’ பேருந்து நிறுத்தத்திற்குச் செல்லும் பேருந்தில் ஏறி பயணித்தாள். மீண்டும் அங்கிருந்து ஜொகூர் பாரு வந்தாள். ஜொகூர் பாரு பேருந்து நிலையத்திலிருந்து சிம்பாங் மாசாய், சிம்பாங் மாசாயிலிருந்து ஜொகூர் பாரு என்று மாறி மாறிப் பயணித்தாள். ஓரமான இருக்கைகளாகப் பார்த்து அமர்ந்துகொண்டாள். நெடுநேரம் கண்களை மூடிக்கொண்டு பயணித்தாள். கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை அவ்வப்போது துடைத்துக்கொண்டாள். சில நேரம் ஜன்னலுக்கு வெளியே எதையோ தேடினாள். சில நேரம் பேருந்தின் கைப்பிடிகளைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். சில நேரம் அந்தக் கைப்பிடிகளைப் பிடித்துக்கொண்டு நின்றாள். ஒருவர் முகத்தையும் நேராகப் பார்க்காமல் தவிர்த்தாள்.

மாலைவரை பேருந்துகளில் மாறி மாறிப் பயணித்தாள். இரவு தொடங்கும் நேரத்தில் கல்லூரி பேருந்து நிலையத்தில் இறங்கினாள். அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்தாள். அருகிலிருப்பவர்களுக்குத் தெரியாமல் அழுதாள். சிறிது நேரத்திற்குப் பின், மீண்டும் எழுந்து பெட்டிகளைக் கொடுத்த இடத்தை நோக்கிப் பயணித்தாள். அருகிலிருந்த கழிப்பறையில் முகம் கழிவினாள். கண்ணாடியில் தன் முகத்தையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு நின்றாள். பெட்டிகளை மீண்டும் பெற்றுக்கொண்டு தன் வீட்டிற்குச் செல்லும் பேருந்து நிறுத்தத்திற்குப் புறப்பட்டாள்.

8

முகிலன் அதிகாலையிலேயே புறப்பட்டான். நண்பனின் மோட்டார் பைக்கை கடன் கேட்டு முதல் நாள் இரவே சாவியை வாங்கி வைத்துக்கொண்டான்.

ஞாபகம் வெச்சுக்க நண்பா, சாயங்காலம் ஏழு மணிக்குள்ள வந்துடு, ரொம்ப லேட் பண்ணிடாதஎன்றான் மோட்டார் பைக் கொடுத்த நண்பன்.

ஆபத்துக்குக் கைக் கொடுத்த நண்பனை மறந்தாலும் மறப்பேன். பைக் கொடுத்த நண்பனை மறக்க மாட்டேண்டா மச்சி!’ என்று சிரித்தபடி பைக்கில் புறப்பட்டான். காலை 8 மணிக்கே மலரின் கல்லூரி பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்குள்ள ஒரு சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டான். அடுத்து வந்த பேருந்துகளையெல்லாம் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். மூன்று பேருந்துகள் தந்த ஏமாற்றங்களை நான்காவது பேருந்து துடைத்தெரிந்தது. மலர் வந்தாள். வழக்கமாக ஜீன்ஸ் T-சட்டையில் வரும் மலர் இன்று சுடிதாரில் தேவதைபோல் வந்தாள். மிக அருகில் வரும் வரையிலும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் முகிலன்.

என்ன ஆளையே முழுங்கிடறது மாதிரி பாக்கறிங்க?’ என்று மலர் கேட்டவுடன்தான் இந்த உலகத்துக்கே வந்தவன் போல் சிலிர்த்தான்.

இல்ல பஞ்சாபி சூட் எல்லாம் போட்டுட்டு வந்திருக்கியா, அதான். இப்படி நீ நடந்து வர்றதைப் பார்க்க ஆயிரம் கண் வேணும்என்று சிரித்தான்.

எப்படியும்….’ என்று புன்னகைத்தாள். ‘இப்பவே ஐஸ் வெக்காதிங்க, வண்டிய எடுங்கஎன்றாள்.

முகிலன் பைக்கை உதைத்து உறுமச்செய்தான். அவன் தோளில் கை வைத்தப்படி பின்னால் ஏறி அமர்ந்தாள் மலர்.

என்ன இன்னைக்கு ரொம்ப ஸ்டைலா வந்திருக்க?’

ஆமா, உங்க கூட முதல் முதல்ல டேட்டிங் வறேன்ல?’

எங்கே போகப் போறோம்?’ ஆர்வத்துடன் கேட்டான் முகிலன்.

ம்ம்ம்ம்ம்…. தெரியலயே…. எங்கே வேணும்-னாலும் போகலாம். ஆனா அங்கே அலை இருக்கனும்.’

பீச்சுக்கு போறோமா?’ என்று உற்சாகமாக பைக்கை கிளப்பினான் முகிலன்.

ஆமாம், மொதல்ல அங்கதான் போறோம்என்று அவன் மேல் சாய்ந்து அவனைக் கட்டிக்கொண்டாள். அவனது உற்சாகத்தில் மேலும் சிலற்களைச் சேர்த்து உற்ற்ற்ற்சாகமாக்கினாள்.

புத்தகம், நோட்டு, பேக்கெல்லாம் எங்கே?’ என்றான்.

இன்னைக்கு ஒன்னும் கிடையாது. வீட்ல, இன்னைக்குப் ப்ராக்டிகல் க்ளாஸ் மட்டும்தான் அதுனால அதெல்லாம் தேவையில்லைன்னு சொல்லிட்டேன்

ஆமாமா, இன்னைக்குப் ஃபுல்லா ப்ராக்டிகல்மட்டும்தான். அதுவும் நானே சொல்லித் தறப்போறேன்’-ன்னு சிரித்தான்

சீ, அசிங்கமா பேசாதிங்க!!’ என்று கடிந்துகொண்டாள் மலர்.

ஜொகூர் பாருவில் இருந்து டெசாரு கடற்கரைக்குப் பயணமானார்கள். டெசாரு கடற்கரையின் அருகில் வந்ததும் வேகத்தைக் கூட்டினான் முகிலன்.

ஏன் இவ்ளோ வேகமா போறிங்க, மெதுவா போங்க. மெதுவா பைக்ல போகறதுதான் என் ஆசையே!!’

இல்ல, பாதி நேரம் பைக்லயே போய்ட்டா அப்புறம் ப்ராக்டிகல்’-க்கு நேரம் இருக்காதேஎன்று சொல்லி இடுப்பில் கிள்ளு வாங்கிக்கொண்டான் முகிலன். வேகத்தைக் குறைத்து, ஆட்கள் நடமாட்டமில்லாத இடத்திற்கு வண்டியைச் செலுத்தினான். வண்டியை நிறுத்திவிட்டு கடற்கரையை நோக்கி நடந்தார்கள். தண்ணீரில் சிறிது நேரம் கால் நனைத்து நின்றார்கள். பிறகு கொஞ்ச தூரம் கை கோர்த்துக்கொண்டு நடந்தார்கள்.

உன் கை பஞ்சு மாதிரி இருக்கே!! உள்ளே எலும்பு இருக்கா இல்லையா?’ என்றான் முகிலன்.

வெடுக்கெனக் கையை விடுவித்துக் கொண்டாள் மலர்.

திரும்பவும் கையைப் பிடித்து இழுத்து தன் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, ‘இந்தக் கையை நான் வாழ்நாள் முழுக்கப் பிடிச்சுக்கணும்என்றான். மலர் வெட்கப்பட்டாள், இப்பொழுது கையை விடுவித்துக் கொள்ளவில்லை.

இருவரும் தண்ணீரில் கால் நனைய நடந்தார்கள். அங்கே ஓரிடத்தில் இளநீர் குடித்தார்கள். மீண்டும் கடலுக்குச் சென்று கால் நனைத்தார்கள், நடந்தார்கள். பின்னர் அங்குக் கட்டப் பட்டிருந்த நாற்காலியில் கடலைப் பார்த்தபடி உட்கார்ந்தார்கள்.

சரி, உன் ஆசையை நிறைவேத்துனதுக்கு எனக்கு என்ன கொடுக்கப்போற?’

ஆசை பைக்ல கூட்டிட்டு வந்ததோட முடிஞ்சுடல. திரும்பவும் என்னைக் கொண்டுபோய் கல்லூரி பேருந்து நிலையத்தில் இறக்கி விடறப்போதான் முடியும். அப்போ வேணும்னா ஒரே ஒரு முத்தம் தர்றேன். அதுவும், கொடுத்த கைக்கு மட்டும் தான்என்று சொல்லிச் சிரித்தாள்.

எனக்கு வேண்டாம், எனக்குக் கொடுக்க வேண்டியதை உதட்டுக்குக் கொடுத்துடு-ன்னு கை சொல்லிட்டா?’

இந்த மாத்தி கொடுக்கிறது எல்லாம் இங்க கிடையாது. வேணும்னா வாங்கிக்க சொல்லுங்க, இல்லைன்னா அதுவும் இல்லை, அவ்ளோதான்.

சரி, சரி. கையே வாங்கிக்குதாம்!!’

அது சரி, என் ஆசையை நிறைவேத்தறதுக்காக பைக்ல கூட்டிட்டு வந்துட்டிங்க, உங்க ஆசை என்னன்னு சொல்லுங்கஎன்றாள்.

எனக்கு ஒன்னும் பெரிய ஆசையெல்லாம் இல்லை. ஒவ்வொரு தடவையும் உன்ன விட்டுட்டு ஜொகூர் பாரு நிலையத்தில் எறங்கற ஃபீலிங் இருக்குபாரு. அதை வார்த்தையால சொல்ல முடியாது. எழுத்தால எழுதவும் முடியாது. ஒவ்வொரு தடவை இறங்கும்போதும், ச்ச, இன்னிக்கு அலுவலகம் போகணுமா? விடுமுறை விட மாட்டாங்களா, அப்டியே உன் கூடவே வந்துரலாமே. அங்கேயிருந்து ரெண்டுபேரும் வேற எங்காவது போக மாட்டோமான்னு இருக்கும். அதுனால, ஒரு நாள் முழுக்க, உன் பக்கத்துலயே உக்காந்துகிட்டு ரொம்ப தூரம் போய் கிட்டே இருக்கணும். அவ்ளோதான் என் ஆசை.’

ம்ம்ம்ம்…. எப்படியும்….

என்ன எப்படியும்? எனக்குத்தான் தெரியும் உன்ன விட்டுட்டு போற வலியும், உன் பக்கத்துலயே உக்காந்துகிட்டு நாள்பூரா இருக்கிற சுகமும்!!’

சரி, அதுதான உங்க ஆசை. நிச்சயமா ஒரு நாள் நிறைவேத்திடலாம். இப்போ கிளம்புங்க போகலாம்.

என் கைகள்ல சத்தே இல்ல. ஒன்னு குடுத்தின்னா ரொம்ப பலமா வண்டி ஓட்டும்.

இருக்கற சத்தை வெச்சு ஓட்டுங்க அப்புறம் கொடுக்கறேன்.

இருவரும் புறப்பட்டார்கள். டெசாருவிலிருந்து ஜொகூர் பாரு செல்லும் சாலையில் திரும்பிக்கொண்டிருந்தார்கள்.

பார்த்துப் போங்க டா. முன்னுக்குப் பாருங்க, ஒரு கார் எவ்ளோ வேகமா வர்றான் பாருங்க. ஏய்.. பாத்து பாத்து பாத்து…

எதிரில் வந்த கார் கட்டுக்கடங்காமல் ஓடி, முகிலன் ஓட்டிச்சென்ற மோட்டார் பைக் மேல் மோதியதில், முகிலன் அந்த இடத்திலேயே உயிரிழந்தான். மலரின் காலில் மோட்டார் பைக் சாய்ந்ததில் எலும்பு முறிந்தது. கால்களை இழுத்துக்கொண்டு நகர்ந்து, முகிலன் உடலருகில் சென்ற மலர், முகிலனின் கைகளைப் பிடித்து முத்தமிட்டுவிட்டு மயக்கமானாள்.